ஸ்கூட்டரில் ஏறி ஹோட்டலுக்குப் போன ராகுல் காந்தி.. மறக்காமல் அந்த ஹெல்மெட்!
May 07, 2023,04:33 PM IST
பெங்களூரு: பெங்களூரில் பிரச்சாரத்திற்கு வந்திருந்த காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, உணவு டெலிவரிக்காக வந்த ஊழியரின் ஸ்கூட்டரில் ஏறி தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார்.
இன்று பெங்களூரு முழுவதும் பரபரப்பாகவே இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி இன்று ரோட்ஷோ நடத்தினார். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நின்றபடி அவர் செல்ல, இரு புறமும் நிற்க வைக்கப்பட்டிருந்த பாஜகவினர் அவர் மீது மலர்களைத் தூவி மகிழ்ந்தனர்.
இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலைவுக்கு பிரதமர் நரேந்திர மோடிரோடு ஷோ நடத்தினார். பெங்களூரில் உள்ள திப்பசந்திரா சாலையில் தொடங்கி டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் ரோடுஷோ முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
நேற்றும் பிரதமரின் ரோடுஷோ பெங்களூரில் நடந்தது. கிட்டத்தட்ட 13 சட்டசபைத் தொகுதிகளில் 26 கிலோமீட்டர் தொலைவுக்கு அவர் ரோடுஷோ நடத்தி அசத்தினார். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக மீது கடும் அதிருப்தி அலை வீசுகிறது. உள்ளூர் தலைவர்கள் மீது கர்நாடக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவேதான் பிரதமர் நரேந்திர மோடியே மெனக்கெட்டு மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட நேரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கூட்டரில் போன ராகுல் காந்தி
இன்று காலை பிரதமரின் இந்த பரபரப்பான ரோடுஷோ நடந்த நிலையில், ராகுல்காந்தி செய்த செயல் பெங்களூரு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களுக்காக பெங்களூரில் முகாமிட்டுள்ளார் ராகுல் காந்தி. இந்தநிலையில் இன்று பிற்பகல் ஒரு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் தனது ஹோட்டலுக்கு ஸ்கூட்டர் ஒன்றில் திரும்பினார்.
ராகுல் காந்தி இருந்த இடத்திலிருந்து ஹோட்டல் 2 கிலோமீட்டர் தொலைவில்தான் இருந்தது. அதற்காக கார் வேண்டாம் என்று முடிவு செய்த ராகுல் காந்தி, உணவுப் பொருள் டெலிவரிக்காக வந்திருந்த ஊழியரிடம் லிப்ட் கேட்டு அவருடன் சென்றார். மறக்காமல் ஹெல்மெட்டையும் அவர் போட்டுக்கொண்டதுதான் ஹைலைட்.
கர்நாடகத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.