கர்நாடகாவில் மக்கள் தொகை அதிகரிக்க.. "மின்வெட்டே காரணம்".. மத்திய அமைச்சர் பலே!

Su.tha Arivalagan
Mar 10, 2023,06:40 PM IST

பெங்களூரு:  கர்நாடகத்தை கடந்த முறை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியில் அதிக அளவில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே மாநிலத்தின் மக்கள் தொகை கிடுகிடுவென அதிகரித்து விட்டதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூர் வந்திருந்த பிரகலாத்  ஜோஷி அங்கு நடந்த பாஜக கூட்டத்தில் பேசும்போதுதான் இப்படித் தெரிவித்தார். இவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களை குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு இது என்று காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.




முன்னதாக பாஜக கூட்டத்தில் பிரகலாத் ஜோஷி பேசும்போது கூறியதாவது:


கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தால் இலவச மின்சாரம் தருவோம் என்று இப்போது காங்கிரஸ் கூறுகிறது. இதை நம்பப் போகிறீர்களா? அவர்கள் ஆட்சி நடந்தபோது மின்வெட்டைத்தான் அதிகமாக மக்களுக்குக் கொடுத்தனர்.  மின்சாரத்தைப் பயன்படுத்தவே இல்லை. கிராமங்களில் எப்போதுமே மின்சாரம் இருந்ததில்லை. பிரதமராக மோடி வந்த பிறகுதான் 24 மணி நேரமும் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கினார். காங்கிரஸ் ஆட்சியில், குறைந்த அளவே மின்சார விநியோகம் இருந்ததால் மக்கள் தொகைதான் உயர்ந்தது என்றார் ஜோஷி.


கர்நாடக சட்டசபைக்கு  விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான் முஸ்தீபுகளில் அனைத்துக் கட்சிகளும் இறங்கி விட்டன. பாஜகவுக்காக வாக்கு சேகரிக்க இப்போதே மத்திய அமைச்சர்கள் வரத் தொடங்கி விட்டனர். காங்கிரஸ் தரப்பிலும் பிரச்சார நெடி அதிகரிக்கத் தொடங்கி விட்டது. 


காங்கிரஸ் கட்சி தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.