பெண்களுக்கு மாதம் ரூ. 2500.. திமுக வழியில் காங்... தெலங்கானாவில் பலே வாக்குறுதி!

Su.tha Arivalagan
Sep 18, 2023,12:47 PM IST

ஹைதராபாத்:  திமுக எப்படி தமிழ்நாட்டில் வாக்குறுதிகள் அளித்ததோ அதை பல்வேறு மாநிலங்களிலும் காப்பி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் தெலங்கானா மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் பலரையும் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.


தமிழ்நாடு எப்போதுமே பல்வேறு வழிகளிலும் நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறது. அது கல்வியாக இருந்தாலும் சரி, மருத்துவமாக இருந்தாலும் சரி, வளர்ச்சியாக இருந்தாலும் சரி, புரட்சிகர திட்டங்களாக இருந்தாலும் சரி தமிழ்நாடு எப்போதுமே நாட்டுக்கே வழிகாட்டியாக இருந்துள்ளது.


ஜெயலலிதா காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் திட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இன்று பின்பற்றப்படுகிறது. அதேபோல பல்வேறு இலவசத் திட்டங்களை பல்வேறு மாநிலங்களிலும் பின்பற்றுகிறார்கள்.




தற்போதைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்துகள், பெண்களுக்கு மாதாந்திர உரிமைத் தொகை ஆகியவற்றையும் இப்போது காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டனர். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை தரும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. இதை தற்போது காங்கிரஸும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.


தெலங்கானாவில் அந்த மாநில மக்களுக்கு 6 முக்கியமான உறுதிமொழிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதில் ஒன்றுதான் மகாலட்சுமி திட்டம். இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2500 உதவித் தொகை வழங்கப்படும். இது திமுகவின் மகளிர் உரிமைத் திட்டமேதான்.


அதேபோல பெண்களுக்கு இலவச பஸ் பயணச் சலுகையையும் அது அறிவித்துள்ளது. இதுவும் கூட ஏற்கனவே  திமுக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றுள்ள திட்டம்தான். இந்தத் திட்டத்தை கர்நாடகத்திலும் காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.