திடீர் திருப்பம்.. ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டி.. காங்கிரஸ் அறிவிப்பு.. அமேதிக்கு வேறு வேட்பாளர்

Su.tha Arivalagan
May 03, 2024,09:32 AM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று ராகுல் காந்தி பெயரை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.


முன்னதாக இத்தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பிரியங்கா காந்தியை தேர்தலில் காங்கிரஸ் நிறுத்தவில்லை. மாறாக ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்பாளராக்கப்பட்டுள்ளார். அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.




ரேபரேலி தொகுதியில் இதற்கு முன்பு இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இது இந்திரா குடும்பத்துத் தொகுதியாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடவில்லை. அவர் ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த பாரம்பரியம் மிக்க தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராகியுள்ளார்.


ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். அவர் ரேபரேலியில் போட்டியிடுவதால் காங்கிரஸார் உற்சாகமடைந்துள்ளனர். ராகுல் காந்தி ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் வயநாடு, அமேதியில் போட்டியிட்டார். அதில் அமேதியில் தோல்வி அடைந்தார். ஆனால் வயநாடு தொகுதியில் மிகப் பெரிய வெற்றியடைந்தார். இந்த முறையும்  அவர் வயநாட்டில் போட்டியிட்டுள்ளார். அங்கு தேர்தல் முடிந்து விட்டது. இந்த நிலையில் அமேதிக்குப் பதில் ரேபரேலியில் அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற ஸ்மிருதி இராணியே இந்த முறையும் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த முறை ராகுல் காந்தியை தோற்கடித்ததால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கிடைத்தது. ஆனால் தற்போது அவருக்கு வலுவான போட்டியாளர் இல்லாமல் போய் விட்டது. பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் நிறுத்தப்படவில்லை.