காங்கிரஸில் ஓரம் கட்டப்படுகிறாரா பிரியங்கா காந்தி ?

Aadmika
Dec 24, 2023,11:12 AM IST

டில்லி : காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் அவர் ஓரம் கட்டப்படுவதாக கட்சிக்குள் பேச்சுக்கள் எழுந்துள்ளது.


2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதனால் கட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற புதிய மாற்றத்தின் படி பிரியங்கா காந்தி, உத்திர பிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பதவியில் இருந்த நீக்கப்பட்டுள்ளார். அதே போல் ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும், முதல்வர் அசோக் கெலட்டை நீண்ட நாட்களாக எதிர்த்து வருபவருமான சச்சின் பயலட் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரமேஷ் சென்னிதலா, மகாராஷ்டிர பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அதே சமயம் பிரியங்கா காந்திக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமல், பொதுச் செயலாளராக மட்டும் இருக்க வைக்கப்பட்டுள்ளார். பிரியங்காவிற்கு பதிலாக அவினாஷ் பாண்டே உத்திரபிரதேசத்திற்கு கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என இண்டியா கூட்டணியில் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து பிரியங்கா நீக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.




கட்சியில் புதிதாக செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் கூடி ஆலோசனை நடத்தினர். குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் மாற்றப்படவில்லை. பீகாரில் லாலு பிரசாத் மற்றும் நிதிஷ் குமார் இருவருக்கும் மிகவும் நெருக்கமான மோகன் பிரகாஷ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 


அவதூறு வழக்கில் எம்.பி., பதவியை இழந்து, ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்ட போது அவருக்கு பதில் பிரதமர் வேட்பாளராக பிரியங்கா நிறுத்தப்படலாம் என கட்சிக்குள் பேச்சு அடிபட்டது. அதற்கு ஏற்றாற் போல் பிரியங்காவிற்கு பல பொறுப்புகள் வழங்கப்பட்டு, அவர் கட்சியின் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால், வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என இண்டியா கூட்டணியில்  முடிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களில் பிரியங்கா, உத்திர பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவர் மோடிக்கு வலுவான போட்டியாளராக இருக்க மாட்டார் என கட்சி முடிவு செய்து விட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


ராகுல் காந்தி மீண்டும் எம்.,பி ஆனதில் இருந்தே பிரியங்காவின் கை கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் இறங்க துவங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. உத்திர பிரதேச தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பிரியங்காவிற்கு வேறு ஏதாவது பொறுப்பு வழங்கப்படுமா அல்லது இப்படியே கட்சியில் அவரின் முக்கியத்துவம் குறைக்கப்படுமா என்றும் கட்சிக்குள் குழப்பம் எழுந்துள்ளது.