கெளதம் அதானி நாட்டை விட்டு ஓடி விடப் போகிறார்.. பாஸ்போர்ட்டை முடக்குங்க.. காங்கிரஸ்!

Su.tha Arivalagan
Feb 07, 2023,01:21 PM IST
டெல்லி: நீரவ் மோடி, விஜய் மல்லையா போல கெளதம் அதானியும் நாட்டை விட்டு ஓடி விடப் போகிறார். எனவே முதலில் அவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.



பல்வேறு மோசடிப் புகார்கள் கெளதம் அதானி மீது விழுந்துள்ளன. ஹின்டன்பர்க் ஆய்வறிக்கை அவருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் சூறாவளியாக சுற்றி வருகிறது.  அவரது நிறுவனப் பங்குகள் படு மோசமாக சரிந்து விட்டன. உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 20ஐ விட்டு அவர் விரட்டப்பட்டு விட்டார்.

இந்த நிலையில், கெளதம் அதானி நாட்டை விட்டு ஓடிப் போகும் அபாயம் உள்ளதாக காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. அவர் நாட்டை விட்டு ஓடிப் போய் விடாமல் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மும்பையில் இன்று காங்கிரஸ் சார்பில் அதானிக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் இப்படித்தான் பெரும் பண மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு ஓடினார்கள்.  அவர்களது பாஸ்போர்ட்டுகளை பாஜக அரசு முடக்காமல் விட்டதால்தான் அவர்கள் ஓடிப் போய் விட்டனர். அதேபோல அதானியும் ஓடிப் போய் விட வாய்ப்புள்ளது. எனவே முதலில் அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்.

ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேஷ் மீதான புகார்கள் வெடித்தபோது காங்கிரஸ் அரசு அவர்களது பாஸ்போர்ட்டுகளை முடக்கியது. இதனால் அவர்கள் நாட்டை விட்டு ஓடாமல் தடுக்கப்பட்டனர். ஆனால் பாஜக மத்திய அரசு பாஸ்போர்ட் முடக்குவதை தாமதப்படுத்தியதால்தான் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் ஓடினார்கள். இப்போது அதானியின் பாஸ்போர்ட்டையாவது மத்திய அரசு முடக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.