டிடிஎப் வாசனுக்கு ஒரு வழியாக ஜாமீன் கிடைத்தது.. மகிழ்ச்சியில் "ரசிகர்கள்"

Meenakshi
Nov 01, 2023,02:52 PM IST

சென்னை:  நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.


அதி வேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வது டிடிஎப் வாசனின் பொழுதுபோக்கு. திடீர் திடீரென நெடுஞ்சாலைகளில் அதி வேகமாக செல்வார், வீலிங் செய்வார்.. விதம் விதமாக சாகசம் செய்வார். இவரைப் பார்த்து பலரும் இதுபோல அதி வேகமாக பைக் ஓட்டுவது அதிகரித்து விட்டது. இப்படிப்பட்டவர்களால் பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. பலர் உயிரிழந்தும் உள்ளனர்.


இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு டிடிஎப் வாசன் பெங்களூரு சாலையில் அதிவேகமாக பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவர் தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார். காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேறினார். இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி, பரபரப்பானது. 



விபத்தை ஏற்படுத்திய வாசனை போலீஸார்  கைது செய்தனர். அவர் 10 வருடம் பைக் ஓட்டவும் தடை விதித்து லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் பல முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். வாசனின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்து.


இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு டிடிஎஃப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் அவரால் வாகனம் ஓட்ட முடியாது. எனவே ஜாமீன் தர வேண்டுமென வாசன் தரப்பில் வாதிடப்பட்டது. 


அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த 3 வாரங்களுக்கு தினமும் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.