டீக்கடைக்காரர்களுக்கு நற்செய்தி..  கமர்சியல் சிலிண்டர் விலை குறைப்பு.. புது  விலை இதுதான்!

Meenakshi
Apr 01, 2024,12:12 PM IST

சென்னை: கமர்சியல் சிலிண்டர் எனப்படும்  வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வணிக  பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் குறைத்து அறிவித்துள்ளது. இந்த விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும். அதன்படி, தற்போதைய ஏப்ரல் மாதத்திற்கான வணிக எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன எண்ணெய் நிறுவனங்கள். 




19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு  இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 2024 புத்தாண்டிற்கு முன்னர் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.39.50 குறைத்தது எண்ணெய் நிறுவனங்கள். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.23.50 உயர்ந்து ரூ.1960க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ரூ.30.50 காசுகள் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதன்படி  சென்னையில் வணிக சிலிண்டர் விலை தற்போது ரூ.1930க்கு விற்பனை  செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு  முன்னர் வீட்டு உயோக சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஆனால் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் இன்றி, வணிக சிலிண்டர் விலையில் மட்டும் ரூ.30.50 காசுகள் குறைத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.