காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி - நடிகை சங்கீதா திருமணம்.. போட்டோ வெளியிட்டு வாழ்த்திய பிரபலம்
சென்னை : பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகை சங்கீதாவை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண போட்டோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிந்துள்ளார் பிரபல டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன்.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. ஆரம்பத்தில் டான்சராக இருந்த இவர் அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி உள்ளார். ஆனால் டான்ஸராக இருந்த போது இவரை யாருக்கும் தெரியாது. சினிமாவிற்கு வருவதற்கு முன் சென்னை மற்றும் பெங்களூருவில் அரசு பொருட்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக பணியாற்றி உள்ளார்.
2018 ல் டைரக்டர் நெல்சனின் அறிமுகத்திற்கு பிறகு பல படங்களில் காமெடி ரோலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்து, பிரபலமாக்கிய படம் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர். இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த காமெடி நடிகர் விருது கிடைத்தது.
அதற்கு பிறகு ரஜினியின் அண்ணாத்தே, விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்த அன்னபூரணி, கன்ஜூரிங் கண்ணப்பன், வா வரலாம் வா ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன.
கங்குவா, வாஸ்கோ ட காமா போன்ற படங்கள் தற்போது இவர் கைவம் உள்ளன. தற்போது கிங்ஸ்லிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சீரியல் நடிகை சங்கீதாவை அவர் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரும் டான்சராக இருந்து சினிமாவிற்கு வந்தவர் தான். விஜய்யின் மாஸ்டர், சந்தானம் நடித்த பாரீஸ் ஜெயராஜ், அஜித்தின் வலிமை, கார்த்தி நடித்த சுல்தான் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். பாலிவுட் படங்கள் சிலவற்றிலும் இவர் நடித்துள்ளார். இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, சன் டிவி.,யின் திருமகள் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா ஆகியோரின் திருமணம் இன்று எளிமையாக நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இவர்களின் திருமண போட்டோக்களை பிரபல டான்சர் சதீஷ் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கிங்ஸ்லி. வாழ்க்கையும் பிளாக்பஸ்டர் வெற்றி அடைய வாழ்த்துக்கள். இது நிஜம். எந்த படத்தின் செட்டிலும் எடுக்கப்பட்டது கிடையாது என குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை வகிர்ந்து வருகின்றனர்.