பீனிக்ஸ் மாலில் பிரச்சினை.. நீதிபதியிடம் வாய்ச் சண்டை.. காமெடி நடிகர் ஜெயமணி, நண்பர் கைது!

Su.tha Arivalagan
Oct 21, 2023,02:23 PM IST

சென்னை: காமெடி நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மீது நீதிபதி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.


தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் ஜெயமணி. பார்க்க நடிகர் செந்தில் போலவே இருப்பார். அவரைப் போலவே காமெடி செய்து நடித்தும் வந்தார். வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்துள்ளார்.




இந்த நிலையில் சென்னை 7வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி திருமால், ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோர் மீது வேளச்சேரி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் வைத்து தன்னை ஆபாசமாக பேசிய அவமரியாதை செய்யும் வகையில் ஜெயமணியும், மாரிமுத்துவும் நடந்து கொண்டதாக  கூறியிருந்தார்.


இதையடுத்து இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேரில் அழைத்து விசாரித்து பின்னர் கைது செய்தனர். அதன் பின்னர் இருவரும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்து ஜெயமணி தரப்பில் கூறுகையில் வாக்கிங் போகும் பூங்காவுக்குள் நாயைக் கொண்டு வருவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இது என்று தெரிய வந்துள்ளது.