"வாடை வாட்டுது".. கடும் குளிரில் நடுங்கும் டெல்லி.. பனி மூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

Su.tha Arivalagan
Dec 26, 2023,08:36 AM IST

டெல்லி: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் அலை வீசுகிறது. பனி மூட்டம் காரணமாக காலையில் போக்குவரத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்டது.


வட இந்தியா முழுவதும் இப்போது கடும் குளிர் காலம். மிகக் கடுமையான குளிர் காற்று வீசுவதால் மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். வரும் நாட்களில் இது அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று கடும் குளிரும், பனி மூட்டமும் நிலவியது.


எதிரில் வருபவர் சரியாக தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால் வாகனப் போக்குவரத்து மெதுவாகவே இருந்தது. அதிக அளவிலான வாகனங்களைப் பார்க்கவும் முடியவில்லை.




டெல்லி தவிர பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உ.பி, ராஜஸ்தான், வடக்கு மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் குளிர் கடுமையாக உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்குமாம்.


ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு, புதுச்சேரி,  கேரளாவின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. சென்னையில் பகலில் அதிக அளவில் வெயில் தெரியவில்லை. மாறாக குளிர்காற்றும், வாடையாகவும் இருக்கிறது.