7 மாதங்களில்.. 105 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கோவை பெண்ணின் சபாஷ் சேவை!
Jan 26, 2023,12:37 PM IST
கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்த 27 வயதான கே. ஸ்ரீவித்யா என்ற பெண் கடந்த ஆண்டு 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இந்த தாய்ப்பால் தானம், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் சரிவர கிடைக்காத நிலை நிலவுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரிவர சுரக்காமல் இருப்பது, பிரசவத்திற்குப் பின்னர் தாய் இறந்து விடுவது என்று பல காரணங்கள் உள்ளன.
இப்படிப்பட்ட குழந்தைகளுக்காக பல தாய்மார்கள், தாய்ப்பாலை தானமாக வழங்குகின்றனர். முன்பு மிகவும் அரிதாக இருந்த இந்த சேவை தற்போது அதிகரித்துள்ளது. பலரும் முன்வந்து தாய்ப்பாலை தானமாக அளிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர்தான் கோவை வடவள்ளியைச் சேர்ந்த கே.ஸ்ரீவித்யா. இவருக்கு 27 வயதாகிறது. ஸ்ரீதிவ்யா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரையிலான 7 மாத காலகட்டத்தில் மொத்தம் 105 லிட்டர் 980 மில்லி லிட்டர் தாய்ப்பாலை தானமாக அளித்துள்ளார்.
அமிர்தம் பவுண்டேஷன் மூலமாக, கோவை மருத்துவக் கல்லூரியில் உள்ள சிறப்பு சிசு பராமரிப்பு மையத்தில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு இந்த தானத்தை அவர் அளித்துள்ளார். இது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் சாதனையாக பதிவாகியுள்ளது.
ஸ்ரீவித்யாவுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது 10 மாதமான பெண் குழந்தையும் அவருக்கு உள்ளது.