கோயம்பத்தூர் மேயர் கல்பனா ஆனந்தகுமார் - நெல்லை மேயர் சரவணன் அடுத்தடுத்து ராஜினாமா
கோயம்பத்தூர்: கோயம்பத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினார். அதேபோல தற்போது நெல்லை மேயரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் 97 பேரும், அதிமுகவை சேர்ந்த மூன்று பேரும் கவுன்சிலராக பதவி வகித்து வருகின்றனர். கோவை மாநகராட்சியின் 19 வது வார்டு கவுன்சிலராக பணியாற்றி வருபவர் கல்பனா. இவருடைய கணவர் ஆனந்த்குமார். இவர் திமுகவில் பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்.
மேயர் கல்பனா பதவியேற்ற நாளிலிருந்து புகார்கள் எழுந்த வண்ணம் எழுந்து வந்தது. இதற்கு காரணம் அவரது கணவர் ஆனந்த் குமாரின் தலையீடு என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் புகார் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று கல்பனா தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக திமுக வட்டாரத்தில் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.
இந்தப் பின்னணியில் இன்று மேயர் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் அளித்தார். கல்பனாவின் திடீர் ராஜினாமாவிற்கு காரணம் என்ன என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தனது சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ததாக கல்பனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பல பெருமைகள் படைத்த கல்பனா
கோயம்பத்தூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை படைத்தவர் கல்பனா ஆனந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல திமுக சார்பில் மேயரான முதல் தலைவரும் கல்பனாதான். கோயம்பத்தூர் மாநகராட்சியின் 6வது மேயராக இருந்து வந்தவர் கல்பனா.
கடந்த முறை மேயராக இருந்த கணபதி ராஜ்குமார்தான் தற்போது கோயம்பத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார். கோவையில் இதுவரை மேயராக பதவி வகித்துள்ளவர்களில் 3 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமாகா மற்றும் ஒருவர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். முதல் முறையாக திமுக கடந்த தேர்தலில் மேயர் பதவியை இங்கு கைப்பற்றியது. தற்போது சர்ச்சைகளால் அந்த மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திருநெல்வேலி மேயர் சரவணன் ராஜினாமா
கோயம்பத்தூர் மேயர் கல்பனா ஆனந்தகுமாரைத் தொடர்ந்து தற்போது நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக தலைமையின் உத்தரவின் பேரில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாநகராட்சி ஆணையாளருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்துள்ளார்.
கடந்த வருடமே சரவணன் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்குமே அங்கு ஒத்துப் போகவில்லை. பல்வேறு புகார்களிலும் சிக்கினார். இதனால் தொடர்ந்து சர்ச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் கட்சித் தலைமையின் உத்தரவின் பேரில் தனது பதவியை சரவணன் ராஜினாமா செய்துள்ளார்.