வந்தே பாரத் ரயிலில் கொடுத்த உணவில் கரப்பான் பூச்சி
டெல்லி : வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்தியாவின் அதிவிரைவு சொகுசு ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் முக்கிய வழித்தடங்களில் துவங்கப்பட்டது. இந்த ரயிலில் மிக குறைந்த நேரத்திலேயே பயணிகள் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வித சிரமமும் இல்லாமல் சொகுசாக போய் சேர்ந்து விடலாம் என்பதால் இந்த ரயிலில் செல்ல அதிகமானவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் சாதாரண கட்டணத்திலும் பயணம் செய்யும் சேவையும் இந்திய ரயில்வே நிர்வாகத்தால் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் போபாலில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு இந்திய ரயில்வே சார்பில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த நபர் கரப்பான் பூச்சி இருக்கும் உணவை போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ தற்போது தீயாய் பரவி வருகிறது. இதை கண்ட நெட்டிசன்கள் அனைவரும் கொந்தளித்து, இது போன்ற மோசமான சேவை அளித்ததற்காக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதுடன் ரயில்வே நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதற்காக பயணிகள் அனைவருக்கும் ரயில்வே நிர்வாகம் நஷ்டஈடு வழங்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர். இந்த போட்டோ வெளியாகி சோஷியல் மீடியாவில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த பயணியிடம் ரயில்வே நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுள்ளது. உணவு சேவை வழங்கும் நபருக்கு இது குறித்து அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதை சீரியசாக எடுத்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்விட்டர் மூலமே மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது ரயில்வே.