3 பெட்டி இருக்கும்.. டிரைவர் கிடையாது.. சுப்ரீம் வசதிகளுடன்.. சூப்பராக மாறும் சென்னை மெட்ரோ!
சென்னை: 3 பெட்டிகளுடன் கூடிய ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் பெட்டிகளை உருவாக்கும் திட்டப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ரயில் பெட்டிகளில் மேலும் கூடுதல் வசதிகள் செய்யப்படவுள்ளன. குறிப்பாக பெண்களுக்காக பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் சேவையையும், சென்னைவாசிகளையும் பிரிக்க முடியாது. அப்படி இணைந்து விட்டனர் மெட்ரோவும், மக்களும் என்றே சொல்லலாம். சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க சென்னை வாசிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் மெட்ரோ என்றால் அது மிகையில்லை எனலாம்.
இப்போது அடுத்த கட்டத்துக்கு மாறப் போகிறது சென்னை மெட்ரோ.. அதாவது டிரைவரே இல்லாத ரயிலுக்கு சென்னை மெட்ரோ மாறப் போகிறது.. என்னாது ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலா... என்று ஆச்சரியமாக இருக்கா.. நிஜம்தாங்க.. சூப்பரான வசதிகளுடன் அதி நவீனத்திற்கு மாறவுள்ளது சென்னை மெட்ரோ.
டிரைவர்கள் இல்லாத ரயில்கள்
சென்னை மெட்ரோ தொடங்கப்பட்டது முதலே பயணிகளை ஈர்க்க தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டேதான் இருக்கின்றனர். அந்த வகையில் அடுத்து டிரைவர் இல்லாத ரயில்கள் வரப் போகின்றன. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஓட்டுனர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூபாய் 269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. ஏற்கனவே 3 பெட்டிகள் கொண்ட 26, டிரைவர்கள் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்க 2022ம் ஆண்டு ரூ. 947 கோடிக்கு ஓப்பந்தம் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது மேலும் 10 மெட்ரோ ரயில்களை தயாரிக்க புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, புதிய ரயில் பெட்டிகள் இன்னும் 28 மாதங்களில் மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஓப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்
ஓட்டுநர் இல்லாத மொத்தம் 138 ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களில் தலா 3 பெட்டிகள் மட்டுமே இருக்கும். 1000 பேர் வரை இதில் பயணிக்க முடியும். இந்த ரயில்களில் பல்வேறு புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது பெண்களுக்கு பிரத்யேக பெட்டி இருக்கும். அவர்களது பகுதிக்குள் வேறு யாரும் போக முடியாத அளவுக்கு வசதி செய்யப்படும். அவர்களது பெட்டியின் கைப்பிடிகள் பிங்க் நிறத்தில் இருக்கும். மேலும் தாழ்வான உயரத்தில் அவை பொருத்தப்பட்டிருக்கும்.
மாற்றுத் திறனாளிகள், அதாவது வீல் சேரில் வரும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக பெட்டியில் ஏறவும், இறங்கவும் வசதியாக அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக புதிய கைப்பிடியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இறங்குவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், கதவுக்கு அருகே பொருத்தப்பட்டுள்ள பட்டனை அழுத்தினால், ரயில் கூடுதல் நேரம் நிற்கும். அவர்கள் இறங்கிய பின்னரே ரயில் கிளம்பும்.
அனைத்துப் போட்டிகளின் கதவுகளுக்கு மேலேயும் புதிய எல்சிடி ஸ்கிரீன் பொருத்தப்பட்டிருக்கும். அதில் ரயில் தற்போது எந்த இடத்தில் செல்கிறது உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் இடம் பெறும். உபயோகமான பிற தகவல்கள், பொழுதுபோக்குத் தகவல்கள் அடங்கிய எல்சிடி ஸ்கிரீன்கள் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும்.
பாதுகாப்புக்கு பிரத்யேக ஏற்பாடுகள்
பாதுகாப்புக்கான பிரத்யேக வசதிகளும் புதிய ரயில்களில் இடம் பெறும். ரயில் போய்க் கொண்டிருக்கும்போது புகை அல்லது தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக எச்சரிக்கும் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. ரயில்களிலிருந்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றத் தேவையான அவசர கால கதவும் அமைக்கப்பட்டுள்ளது. சீட்டுகளுக்கு கீழே தீத்தடுப்பான்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ரயில் பாதையில் விபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதை முன்கூட்டியே கண்டறியும் டிடெக்டர் வசதியும் பொருத்தப்படும். இதன் மூலம் அசம்பாவிதம் ஏற்படாமல் முன்கூட்டியே தவிர்க்க முடியும்.
ரயில் பெட்டிகளுக்குள் வெப்ப நிலையை சரியான முறையில் வைத்திருக்க உதவும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஏசி அதிகமாக இருப்பது அல்லது குறைவாக இருப்பது போன்ற பிரச்சினைகள் சரி செய்யப்படும். ரயிலில் மைக்ரோபிராசசர் மூலம் இயக்கப்படும் பிரேக்குகள் பயன்படுத்தப்படும் என்பதால் வண்டியை நிறுத்தும்போது அதிர்வு, அசைவு அதிகம் இருக்காது.
இப்படி பல்வேறு வசதிகளுடன் கூடியதாக புதிய டிரைவர்கள் இல்லாத மெட்ரோ ரயில்கள் இருக்கும் என்பதால் பாதுகாப்பானதாகவும், அனுபவித்துப் பயணிக்கும் படியாகவும் இந்த ரயில்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலத்தில் இதுபோன்ற அதி நவீன வசதிகளுடன் கூடிய, டிரைவர்கள் இல்லாத ரயில்கள் அதிகரிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை பல்வேறு பகுதிகளிலும் விரிவாக்கப் பணிகள் போர்க்கால வேகத்தில் வருகின்றன. எதிர்காலத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை ரயில்கள் விரிவுபடுத்தப்படவுள்ளன. இவையெல்லாம் வரும்போது மெட்ரோ ரயில் சேவை மிகப் பெரிய அளவில் விரிவடைந்திருக்கும். நாட்டிலேயே மிகவும் சிறப்பான மெட்ரோ சேவை சென்னை மெட்ரோ ரயில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்: Chennai Metro Rail (@cmrlofficial)