அதி நவீன.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்.. ஜனவரி 23ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
சென்னை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அதிநவீன அரங்கத்தை ஜனவரி 23ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முன்னதாக கோட்டை முனி திடலில் இன்று இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான, முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு திருவிழா ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் 1000க்கும் மேற்பட்ட காளைகளும் ,700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள மக்கள் ஜல்லிக்கட்டுக்கு பெரிய அரங்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 110 விதியின்படி சட்டமன்றத்தில் பேசுகையில், கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் சுமார் 44 கோடி செலவில் 67 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் 12000 பேர் அமர்ந்து பார்த்து ரசிக்கும்படி பார்வையாளர் கேலரியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுக்கென்றே தனி அருங்காட்சியகம், சோதனைக் கூடங்கள், காளைகளுக்கு தனி கூடாரம் என ஜல்லிக்கட்டு அரங்கம் அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு பிரம்மாண்ட மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் ஜனவரி 23ஆம் தேதி திறந்து வைப்பார் என அமைச்சர் ப.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு மூகூர்த்தகால் நடும் பணி இன்று நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா கலந்து கொண்டனர்.