ஈரோட்டில் விரைவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Meenakshi
Dec 20, 2024,06:40 PM IST

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா  அமைக்கப்படும். திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் மணி மண்டபமும் விரைவில் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வந்தடைந்தார். ஈரோட்டில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனையடுத்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நேரடியாக சென்று பயனாளர்களுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கி அவர்களிடம் நலம் விசாரித்தார்.




இன்று காலை சோலார் புதிய பேருந்து நிலையத்தில் அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:


ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை  ஆகிய 4 இடங்களில் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நம்பியூரில் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈரோட்டில் மஞ்சள் பொது வசதி  மையம், காட்டுப்பாளையத்தில் ஜிம்னாஸ்டிக்  அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. 


ஈரோட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டு விரைவில் ஐடி பார்க் அமைக்கப்படும்.ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் 400 மீட்டர் சின்தடிக் ஓடுதளபாதையுடன் கூடிய கால்பந்து மைதானம் புனரமைக்கப்படும். ஈரோட்டில் பல்வேறு திட்டப்பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்