தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களுக்கு ரூ. 6000 வெள்ள நிவாரணம் வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Dec 21, 2023,07:14 PM IST

திருநெல்வேலி: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


தூத்துக்குடி மற்றும் நெல்லையில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


அதன் பின்னர் மாலையில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட கன மழை மற்றும் பெருவெள்ளம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகளை விளக்கிக் கூறினார் முதல்வர். அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை தான் சந்தித்தது குறித்தும் அவர் விளக்கினார்.




பிரதமர் மோடியை 20 நிமிடங்கள் தான் சந்தித்ததாகவும், கோரிக்கைகளை மனுவாக அவரிடம் கொடுத்துள்ளதாகவும், தென் மாவட்டங்களுக்கு மட்டும் ரூ. 2000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்ததாகவும் முதல்வர் தெரிவித்தார்.


அதன் பின்னர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்கப்படும் என்றும்,  கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.


தனது பேட்டியின்போது அடிக்கடி டெல்லி  செல்லும் ஆளுநர், மத்திய அரசிடம் வலியுறுத்தி வெள்ள நிவாரண நிதியைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.