நீதி வென்றது.. வயநாட்டுக்கு மீண்டும் கிடைத்தார் ராகுல் காந்தி.. மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி!

Su.tha Arivalagan
Aug 04, 2023,02:27 PM IST

சென்னை: காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மோடி துணைப் பெயர் குறித்து ராகுல் காந்தி கர்நாடகத்தில் நடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார்.



அந்த வழக்கை விசாரித்த சூரத் கோர்ட், அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டு சிறைத் தண்டனையை வழங்கி உத்தரவிட்டது. 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றால், அவர்களது எம்.பி, எம்எல்ஏ பதவி பறி போய் விடும். அந்த அடிப்படையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியும் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்தோடு ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ இல்லத்தைக் காலி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டார். அதை ஏற்று ராகுல் காந்தி தனது வீட்டையும் காலி செய்து விட்டார். இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து குஜராத் ஹைகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார் ராகுல் காந்தி. அங்கு இடைக்காலத் தடை வழங்க மறுக்கப்பட்டு விட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பை அளித்தது சுப்ரீம் கோர்ட். அதன்படி  2 ஆண்டு கால சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பியாக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், நீதி வென்றது.. வயநாட்டுக்கு மீண்டும் கிடைத்தார் ராகுல் காந்தி.

சகோதரர் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ள மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை  வரவேற்கிறேன். நீதித்துறை மீதான நமது நம்பிக்கையை மீண்டும் இது உறுதி செய்துள்ளது.  ஜனநாயக மாண்புகளைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுப்ரீம் கோர்ட் உத்தரவு வலியுறுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.