கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லம் சென்ற முதல்வர் ஸ்டாலின்.. கதறி அழுத மனைவிக்கு ஆறுதல்
சென்னை: படுகொலை செய்யப்பட்ட தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது மனைவி பொற்கொடியை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அந்த மர்ம கும்பலை பிடிக்க ஆர்ம்ஸ்டிராங்கின் நண்பர்கள் முயன்றும் அவர்களால் முடியவில்லை. இதில் அவருடைய நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்ஸ்ட்ராங்கையும், காயமடைந்த அவரது நண்பர்களையும், மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீசார் உடனே விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பல் தப்பி ஓடிய சிசிடிவி காட்சி வெளியானது. பத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்களும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றப்பட்டு புதிய ஆணையராக ஏ அருண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை தலைமை செயலகத்தில் இருந்து அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ராங்கின் படத்திற்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்து அவருடன் பேசினார். அப்போது கதறி அழுதபடி நடந்தது குறித்து விவரித்தார் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி.