எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. தலைவர் விஜய்

Meenakshi
Jun 26, 2024,06:01 PM IST

சென்னை: மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. இன்று புதிய சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லாவே தேர்வு செய்யப்பட்டு விட்டார். இன்றைய முக்கிய நிகழ்வாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தனது பணியைத் தொடங்கியுள்ளார். அவரும், பிரதமர் மோடியும் சேர்ந்துதான் சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.


கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் காங்கிஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காமல் போனது. இந்நிலையில்,2024ம் ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது அக்கட்சியினர்களிடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.




முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


எதிர்க்கட்சித் தலைவராகியுள்ள ராகுல் காந்திக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்திருந்த வாழ்த்து செய்தியில்,  புதிய பாத்திரத்தில் சிறந்து விளங்க எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தியை வரவேற்கிறேன்.  அவரது குரல் தொடர்ந்து மக்களவையில் வலிமையுடன் ஒலிக்கட்டும் என்று கூறியிருந்தார். 


இதற்கு ராகுல் காந்தி நன்றி கூறி டிவீட் செய்திருந்தார். அதில் கூட்டாட்சித் தத்துவத்தையும், நமது அரசியல் சாசனத்தையும் காக்க இணைந்து தொடர்ந்து போராடுவோம் என்று கூறியிருந்தார் ராகுல் காந்தி.


நடிகர் விஜய் வாழ்த்து


இதேபோல நடிகர் விஜய்யும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளால் போட்டியின்றி ஒருமனதாக எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.


விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதால், 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்க்க திட்டமிடுகிறாரா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படித்தான் சமீபத்தில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.