ரூ. 115 கோடியில் வட சென்னை வளர்ச்சித் திட்டங்கள்.. தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Manjula Devi
Aug 26, 2024,01:13 PM IST

சென்னை:   வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதிகளுக்காக சென்னை வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூபாய் 115.68 கோடி மதிப்பீட்டில்  ஆறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதில் ரூபாய் 5.22 கோடி மதிப்பில் ஆன முடிவுற்ற நான்கு பணிகளையும் இன்று தொடங்கி வைத்தார்.


கடந்த 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்டமைப்பு பற்றாக்குறைகள், வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகள் ஆகியவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை முழுமையாக செயல்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.


இந்த நிலையில் வடசென்னை வளர்ச்சி திட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ஆறு திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு க ஸ்டாலின். அதேபோல் கொளத்தூர் உணவு பொருள் வழங்கல், மண்டல உதவி ஆணையர் அலுவலகம், புதிய வட்டாட்சியர் அலுவலகம், நவீன சலவைக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட 4 முடிவுற்ற பணிகளை முதல்வர்  தொடங்கி வைத்தார். 



இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பிக்கள் தயாநிதி மாறன் , கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும செயளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கொளத்தூரில் வண்ண மீன்கள் சந்தை


கொளத்தூர் பகுதியில் சர்வதேச தரத்திலான வண்ண மீன்கள் சந்தை அமைத்தல் பணி ரூபாய் 53.50 கோடி மதிப்பீட்டில், ராயபுரம் மூலக்கொத்தலத்தில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்தல் பணி ரூபாய் 14.31 கோடி மதிப்பீட்டிலும், புரசைவாக்கம் கான்ராயன் ஸ்மித் சாலையில் நவீன சலவை கூடம் அமைக்கும் பணி ரூபாய் 11.43 கோடி மதிப்பீட்டிலும், புழல் ஏரிக்கரை மேம்படுத்த ரூபாய் 16.96 கோடி, ரெட்டேரி ஏரிக்கரை மேம்படுத்த ரூபாய் 13.12 கோடி, கொளத்தூர் ஏரிக்கரை மேம்படுத்த ரூபாய் 6.26 கோடி என மொத்தம் 115.58 கோடி மதிப்பீட்டில் ஆறு திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.


அதேபோல் அயனாவரம் நவீன சலவை கூடம் மற்றும் நியாய விலை கடைகள் ரூபாய் 2.72 கோடி, கொளத்தூர் உணவுப்பொருள் வழங்கல், மண்டல உணவு உதவி ஆணையர் அலுவலகம், புதிய வட்டாட்சியர் அலுவலகம் ரூபாய் 2.50 கோடி என மொத்தம் 5.22 கோடி மதிப்பீட்டிலான நான்கு முடிவுற்ற திட்டப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்