மஞ்சள் நிறத்துக்கு மாறிய அரசு பஸ்கள்.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Su.tha Arivalagan
Aug 11, 2023,05:54 PM IST

சென்னை: மஞ்சள் நிறத்துக்கு மாற்றி புதுப்பிக்கப்பட்ட 100 அரசுப் பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


அரசு பஸ்கள் ஆட்சி மாறும்போது வண்ணமும் மாறுவது வழக்கமாகி விட்டது. கடந்த ஆட்சியில் பச்சை நிறத்தில் அரசுப் பேருந்துகள் இருந்தன. திமுக ஆட்சிக்கு வந்ததும் அவை தரம் பிரிக்கப்பட்டு நீல நிறத்திற்கும், சிவப்பு நிறத்திற்கும் மாற்றப்பட்டன. மாநகரப் பேருந்துகள் பெரும்பாலும் தற்போது சிவப்பு நிறத்தில்தான் உள்ளன.




திமுக அரசு வந்த பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் இலவசப் பேருந்துகளுக்கு முன்பும், பின்னும் பிங்க் நிற கலர் கொடுக்கப்பட்டது. 


இந்த நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பலவும் மிகப் பழையதாக இருப்பதால் புதிதாக 1000 பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதற்காக ரூ. 500 கோடி நிதியையும் அது ஒதுக்கியது.




முதல் கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தீவுத் திடலில் இதற்கான விழா நடைபெற்றது. இதில் 100 பேருந்துகளையும் கொடியசைத்து முதல்வர் தொடங்கி வைத்தார். மஞ்சள் நிறத்தில் இந்த பேருந்துகளுக்கு கலர் கொடுக்கப்பட்டுள்ளது. 


விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.