ஜி 20 மாநாடு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்... ஸ்பெஷல்!
Sep 07, 2023,10:10 AM IST
சென்னை: டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 9ஆம் தேதி டெல்லி செல்ல இருக்கிறார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் முதல்வர் கலந்து கொள்கிறார். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவிலும், தெற்கு ஆசியாவிலும் நடைபெறும் முதல் ஜி20 மாநாடு இதுதான். தற்போது ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா இருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.
2023 ஜி20 உச்சி மாநாட்டில் 19 உலக நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகள் ஒன்று கூடி உலகளாவிய நிதி நிலைமையை எப்படி கையாள்வது என்பது பற்றி விவாதிக்கப்படும். டெல்லி டி20 உச்சி மாநாட்டில் விவசாயம், ஊழல் எதிர்ப்பு, கலாச்சாரம், பொருளாதாரம், வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல், காலநிலை, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறும்.
டெல்லி ஜி 20 உச்சி மாநாடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் முடிவில் டி20 தலைவர்களின் கூட்டுப் பிரகடனம் வெளியிடப்படும். மாநாட்டையொட்டி சர்வதேச தலைவர்கள் மற்றும் உள்நாட்டு தலைவர்கள் பலரும் டெல்லி வர உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்திரபிரதேச விமான நிலையங்களில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி நகரமே பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லி சர்வதேச மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது . தலைவர்களுக்காக சிறப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.