ஆளுநர் ஆர். என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. பேசியது என்ன?.. அமைச்சர் ரகுபதி விளக்கம்
சென்னை: நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு அனுமதி தரும் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
ஆளுநர் ஆர். என். ரவியின் அழைப்பின் பேரில் முதல்வர் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவரைச் சந்தித்தார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர்.
முக்கால் மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் சட்ட அமைச்சர் ரகுபதி கூறுகையில், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகளுக்கு ஒப்புதல் கோரியுள்ளோம். இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது.
முதல்வர் மீது ஆளுநரும், ஆளுநர் மீது முதல்வரும் பரஸ்பரம் மரியாதை வைத்துள்ளனர். சந்திப்பு சுமூகமாக உள்ளது. இதன் விளைவு என்ன என்பது இனிதான் தெரிய வரும் என்றார் அமைச்சர் ரகுபதி.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளிப்பது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை, கிடப்பில் போட்டு விடுகிறார் அல்லது மிகுந்த கால தாமதத்திற்குப் பின்னர் திருப்பி அனுப்புகிறார் என்று தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது.
குறிப்பாக நீட் மசோதாவுக்கு ஆளுநர் கடைசி வரை ஒப்புதல் தரவில்லை. திருப்பி அனுப்பினார். இதையடுத்து மீண்டும் அதை சட்டசபையில் நிறைவேற்றி தமிழக அரசு அனுப்பியது. அந்த மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து விட்டார். அதன் பிறகு மேலும் பல மசோதாக்கள் நிலுவையில் இருந்தன. அந்த மசோதாக்களையும் ஆளுநர் ஒப்புதல் தராமல் வைத்திருந்தார்.
இந்த நிலையில் ஆளுநரின் செயல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுகியது தமிழ்நாடு அரசு. அதன் பின்னர் சுப்ரீம் கோர்ட் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் பத்து மசோதாக்களை அதிரடியாக தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார். தமிழ்நாடு அரசும், அந்த மசோதாக்களை மீண்டும் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.. ஆளுநர் அந்த மசோதாக்களை அதிரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டார்.
இந்த நிலையில் ஆளுநர், முதல்வருடன் ஆலோசனை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்களை ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கியது. அதன் எதிரொலியாக தற்போது சட்ட மசோதாக்கள் குறித்து பேச்சு நடத்துவதற்காக முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகாவது அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான பூசல் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர்.