மெட்ரோவுக்கு மேலே.. "ஒரு என்ஜீனியரிங் மார்வல்".. அண்ணாசாலைக்கு.. அழகு சேர்க்கப் போகும்.. பாலம்!
சென்னை: சென்னை இன்னும் ஒரு பெருமையை விரைவில் பெறப் போகிறது. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். இது ஒரு என்ஜீனியரிங் அற்புதம் என்று சொல்லும் அளவுக்கு, இது திகழப் போகிறது.
சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கிட்டத்தட்ட 3.2 கிலோமீட்டர் தொலைவுக்கு, ரூ. 621 கோடி மதிப்பீட்டில் ஒரு உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இதில் என்ன அதிசயம் என்று நீங்கள் நினைக்கலாம்.. இருக்கே.. !
தற்போது சென்னை அண்ணா சாலையின் கீழே மெட்ரோ ரயில் பாதை அமைந்துள்ளது. அதற்கு மேலேதான் இந்த உயர் மட்ட மேம்பாலம் அமையவுள்ளது... இதுதொன் பொறியியல் அற்புதமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வேறு எந்த ஊரிலும் இப்படி, கீழே மெட்ரோ - அதற்கு மேலே உயர் மட்டப் பாலம் போன்ற அமைப்பு இல்லை. அந்த வகையில் இது பொறியியல் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
இந்தப் பாலம் வந்ததும், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான தூரத்தை ஜஸ்ட் 10 நிமிடத்தில் கடந்த விட முடியும். இந்த பாலத்திற்காக போடப்படவுள்ள தூண்களின் அடித்தளமானது, சாலையிலிருந்து 7 மீட்டருக்குக் கீழே போடப்படவுள்ளது. தற்போது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையானது சாலையிலிருந்து 20 முதல் 28 மீட்டருக்குக் கீழே போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணிகள் வெற்றிகரமாக முடியும்போது மிகப் பெரிய சாதனையாக இது மாறும். இந்தப் பாலத்தால் அண்ணா சாலையில் மட்டுமல்லாமல், அதன் பக்கவாட்டு சாலைகளிலும் கூட போக்குவரத்து பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது.
முன்னதாக பாலம் அமைப்பதால் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைக்கு ஆபத்து வருமா என்பது குறித்து விரிவான ஆய்வுகளை சிஎம்ஆர்எல் நிறுவனம் மேற்கொண்டது. சிஎம்ஆர்எல்லுடன், சென்னை ஐஐடி நிபுணர்கள் உள்ளிட்டோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில், உயர்மட்டப் பாலத்தின் அழுத்தம், எந்த வகையிலும் சுரங்கப் பாதையை பாதிக்காத வகையில் கட்டுமானம் எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த ஆய்வுக்குப் பின்னர் பாலம் கட்ட ஒப்புதல் அளித்தது சிஎம்ஆர்எல். இதைத் தொடர்ந்து தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மேம்பாலத்துக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார்.
புதிய மேம்பாலமானது 100 ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்படக் கூடிய வகையில் உறுதியாக கட்டப்படவுள்ளது. இந்த பாலத்தில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்படவுள்ளது. மொத்தமம் 34 மீட்டர் அகலத்தில் பாலம் இருக்கும். இரு வழிப் பாதையாக இது அமைக்கப்படும். சாலையின் இரு பகுதிகளும் 15 முதல் 16 மீட்டர் அகலத்தில் இருக்கும். இரு பக்கத்திலும் தலா 2 மீட்டர் அகலத்தில் நடைபாதையும் அமைக்கப்படும்.
இந்தப் பாலம் வந்த பிறகு, எல்டாம்ஸ் சாலை, எஸ்ஐஇடி காலேஜ் சாலை, செனடாப் சாலை, நந்தனம், சிஐடி நகர், சிஐடி நகர் முதல் மெயின் ரோடு, ஜோன்ஸ் ரோடு ஆகியவற்றில் நிலவும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
சென்னை அண்ணாசாலையின் குறுக்கே உள்ள புகழ் பெற்ற ஜெமினி மேம்பாலம் திமுக ஆட்சிக்காலத்தில்தான் கட்டப்பட்டது. தற்போது இன்னொரு முக்கியச் சாலையான தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை உயர் மட்டப் பாலமும் இதே திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.