காலை உணவுத் திட்டம்.. இனி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்.. நாளை முதல்!

Su.tha Arivalagan
Jul 13, 2024,05:11 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் நாளை முதல் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்படுகிறது. இத்திட்டத்தை நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.


பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான நாளை முதல் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.




இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினையும், மாணவ மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 25.8.2023 அன்று மறைந்த முதல்வர் மு.கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள்.


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.


அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் 15,7.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கிவைக்கிறார்கள்.


இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உலகிகேற்கே முன்னோடியான திட்டமாகத் திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.