தமிழக அரசின் தமிழ் புதல்வன் திட்டம்.. இன்று தொடங்கி வைக்கிறார்.. முதல்வர் மு க ஸ்டாலின்!
சென்னை: உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
ஒவ்வொரு வருடமும் உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி உயர்கல்வி சேர்க்கையில் இந்தியா முதலிடம் என்னும் சாதனையை தமிழகம் படைத்துள்ளது. பொருளாதார ரீதியாக உயர் கல்வியில் சேர முடியாத மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு கல்விக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.
அதில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இதன் மூலம் மாதந்தோறும் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனால்
3, 28,80 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இதேபோல் ஏழை மாணவர்களும் பயனடையும் விதமாக தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகள் பொது அறிவு நூல்கள், பாட புத்தகம் வாங்கிக் கொள்ள ரூபாய் 1000 நிதி உதவி அளிக்கப்பட்டு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். இதன் மூலம் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயில கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதன் மூலம் 3.28 ஆயிரம் பேர் பயனடைவர். இந்த கல்வியாண்டில் இத்திட்டத்திற்கு 360 கோடி ரூபாயை நிதி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.