குமரி முனை வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா.. விரிவான ஏற்பாடுகள்.. சென்னையிலிருந்தும் காணலாம்!

Manjula Devi
Dec 30, 2024,11:17 AM IST

கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கண்ணாடி பாலத்தை திறந்து வைக்க இரண்டு நாள் பயணமாக இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.


கன்னியாகுமரி தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம். இதனைக் காண பூம்புகார் கப்பல்  போக்குவரத்து சார்பாக படகு சவாரியும் வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல் கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காணவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.




மேலும் இங்கு உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் தனித்தனியான படகு சேவைகளை  பயன்படுத்தி வந்தனர். இதனை தவிர்ப்பதற்காக அரசு சார்பில் திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் ஒன்று அமைத்துள்ளது. இது சுமார் 97 மீட்டர் நீளத்திலும், 10 அடி அகலத்திலும்  வடிவமைக்கப்பட்டுள்ளது.


கடந்த 2000 ஆம் ஆண்டு கடல் மத்தியில், நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. இந்த  திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா இன்றும் நாளையும் கொண்டாட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.


அதன்படி, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை  கொண்டாட இன்று மதியம் கன்னியாகுமரிக்கு வருகிறார் முதல்வர் மு க ஸ்டாலின். அப்போது  கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர். அதன் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது இந்த கண்ணாடிப் பாலம்.


செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. இதனையடுத்து திருவள்ளுவர் தோரண வாயிலுக்கு அடிக்கல் நாட்டி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிடுகிறார். அதன் பிறகு அய்யன் திருவள்ளுவர் பசுமை பூங்காவையும், திருக்குறள் கண்காட்சியையும் தொடங்கி வைக்க இருக்கிறார். பிறகு திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார். இன்று முதல்வர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


சென்னையில் நேரடி ஒளிபரப்பு


திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வுகளை சென்னை மாநகராட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்ய பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.  அதன்படி திருவொற்றியூர், மாதவரம், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம்,  அம்பத்தூர், அண்ணா நகர், திருவிக நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், தேனாம்பேட்டை, அடையறு, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய 15 இடங்களில் இது எல்இடி திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்