கள்ளச்சாராயம் விற்றால்.. ஆயுள் தண்டனை.. அதிரடி சட்ட மசோதா.. சட்டசபையில் தாக்கலானது!

Manjula Devi
Jun 29, 2024,05:53 PM IST

சென்னை:   தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என இந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் முத்துசாமி. இந்த மசோதாவில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் ஷரத்துகள் இடம் பெற்றுள்ளன. கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையோடு ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து பேசும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:




கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் விற்கும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யும் தீவிர நடவடிக்கை தொடர்கிறது. விஷ சாராய வழக்கில் இதுவரை 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராய வழக்கில் உயிரிழந்தது தொடர்பாக, 24 மணி நேரத்தில் கைது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 


இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் நடவடிக்கை இல்லை எனக் கூறுவது திசை திருப்பும் நாடகம். மேலும் இத்தனை நடவடிக்கை எடுத்த பிறகும் சிபிஐ விசாரணை கேட்கிறது அதிமுக. சாத்தான்குளம் சம்பவத்தை அதிமுக மூடி மறைக்க முயன்றதால் தான் அப்போது சிபிஐ விசாரணையை கோரினோம். ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். அதை அரசாங்கம் மறுக்கவில்லை. குறுகிய காலத்தில் குற்றவாளிகளை தப்ப விடாமல் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். 


தற்போது கள்ளச்சாராய வழக்கை திமுக அரசு மூடி மறைக்கவில்லை. உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. கள்ளச்சாராயம் போலவே போதைப் பொருளை தடுக்கும் நடவடிக்கைகளிலும் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. போதைப் பொருள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


கோடநாடு வழக்கில் கொலை கொள்ளை நடந்தபோது வெளிநாட்டில் இருந்து செல்போன் அழைப்புகள் வந்துள்ளதால் சர்வதேச போலீஸ் உதவியை நாடுகிறது தமிழக அரசு. தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதால்தான் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கள்ள சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். ஆயுள் தண்டனையுடன் 10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.


திராவிட  மாடல் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைதான் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. மக்களவைத் தேர்தலில் செய்கூலி சேதாரம் இன்றி 40க்கு 40 என்ற வெற்றியை மக்கள் தந்துள்ளார்கள். 2026 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். மக்களவைத் தேர்தல் முடிவுகளை தொகுதி வாரியாக ஆய்வு செய்தால் 222 தொகுதிகளை திமுக கூட்டணி  கைப்பற்றுகிறது என கூறியுள்ளார்.