"அரசு வேலைக்கான மவுசு குறையாது".. முதல்வர் மு.க.ஸ்டாலின் Motivational பேச்சு!
சென்னை: டிஎன்பிசி தேர்வில் வெற்றி பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு வேலைக்கான மவுசு எப்போதுமே குறையாது என்று தெரிவித்தார்.
கடந்த 2022 ஜூன் மாதம் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 10,205 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற அவர்களுக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்க எழுத்தாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வரி தண்டலர்கள், கள உதவியாளர்கள் என மொத்தம் 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
அரசு பணிகள் நன்றாக செயல்பட வேண்டுமெனில் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் . அரசு வேலையின் மதிப்பானது எந்த காலத்திலும் குறையாது. அரசு செயல்படுத்தும் எந்த திட்டமும் மக்களுக்கு நன்மைதான் விளைவிக்கும்.
அரசு ஊழியர்கள் பலர் தன்னலம் பாராமல் அவர்களின் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நீங்களும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு இயந்திரம் செயல்பட அதன் கருவியும் சிறப்பாக செயல்பட வேண்டும் . அப்படித்தான் அரசு இயந்திரம் சரியாக செயல்பட, அரசு அலுவலக அலுவலர்கள் நீங்களும் மக்கள் சேவையை கருத்தில் கொண்டு தன்னலம் பாராமல் முழு ஈடுபாடுடன் செயல்பட வேண்டும்.
கடந்த வாரம் உறுப்பு தானம் செய்வோருக்கு உடல் அடக்கம் செய்யும் போது அரசு மரியாதையை வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தேன் .தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த அரசு ஊழியர் மூளைச்சாவு ஏற்பட்டு அவருடைய உடல் உறுப்பு தானமாக கொடுக்கப்பட்டது. அறிவிப்பு வெளியிட்டு முதல் முதலாக அரசு அலுவலர் உடலுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடையே, மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.