இது அனைவருக்குமான அரசு.. ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் யாராக இருந்தாலும் விட மாட்டோம்.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் உள்ள திமுக அரசு, அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு. ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் உறுதியாக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியைச் சந்தித்து ஆறுதல் கூறினார். கொலையாளிகளையும், கொலைக்குப் பின்னால் உள்ளோரையும் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் என்று அப்போது அவர் பொற்கொடியிடம் தெரிவித்தார்.
பின்னர் இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.
இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும் என்று முதல்வர் கூறியுள்ளார்.