"துணை முதல்வர்".. ஒரு பொய் உடைந்ததால்.. வதந்தி கிளப்புகிறார்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் "உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிறார்" என்று வதந்திகளை பரப்புகிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராகப் போகிறார் என்று செய்திகள் வலம் வந்து பரபரப்பைக் கிளப்பின. இதுகுறித்து உதயநியிடமே செய்தியாளர்கள் கேட்டபோது, முதல்வருக்கு நாங்கள் அனைவருமே துணை நிற்கும் அமைச்சர்கள்தான் என்று அதிரடியான விளக்கத்தைக் கொடுத்தார்.
இந்த நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினே ஒரு விளக்கம் அளித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது:
நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்று இந்தியாவுக்கான முன்னோடித் திட்டங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம். மற்ற மாநிலங்களின் தேர்தல் களங்களில் திராவிட மாடல் அரசின் திட்டங்களே வாக்குறுதிகளாக அளிக்கப்படுகின்றன.
‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படைக் கோட்பாடு. ‘நான்தான் எல்லாம்’ என்கிற போக்கில் செயல்படுகிற ஆட்சியதிகாரம் ஜனநாயகத்திற்குச் சீர்கேடு. அத்தகைய சீர்கேட்டை அகற்றி, ஜனநாயகம் மலர்வதற்கு மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய - கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய ஒன்றிய அரசு 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைந்திட வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கக்கூடிய, மதநல்லிணக்கத்தைப் போற்றக்கூடிய, மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.
தை பிறக்கிறது.. வழி பிறக்கட்டும்
தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.
எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன். நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். உழைக்கிறேன்... உழைக்கிறேன்... உழைக்கிறேன்…
ஒரு பொய் உடைந்ததால்.. வதந்தி பரப்புகிறார்கள்
ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்கு இளைஞரணிச் செயலாளர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி அவர்களே, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார். இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்.
கழகத் தலைவர் என்கிற பொறுப்பு உங்களில் ஒருவனாகிய எனக்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒப்புதலுடன், பொதுக்குழுவின் ஒட்டுமொத்த ஆதரவுடன் வழங்கப்பட்டிருக்கிற பொறுப்பு. முதலமைச்சர் என்கிற பொறுப்பு உடன்பிறப்புகளின் அயராத உழைப்பிலும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும் கிடைத்தது ஆகும். நம்பிக்கை வைத்து பொறுப்பினை வழங்கிய உங்களின் நலனுக்காக, என் சக்திக்கு மீறி உழைக்கின்ற வலிமை என்னிடம் உள்ளது. தலைவர் என்ற உரிமையோடும் அன்போடும் கட்டளையிடுவது, திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.