அடுக்கடுக்காக கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின்.. பாஜகவினர் கூச்சல்.. பரபரப்பு!

Manjula Devi
Jan 02, 2024,05:44 PM IST

திருச்சி: திருச்சி விமான நிலையத் திறப்பு விழாவின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். அப்போது அங்கு பெருமளவில் திரண்டிருந்த பாஜகவினர் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைதியாக இருக்குமாறு பிரதமர் மோடியே சைகை காட்டியும் கூட பாஜகவினர் அமைதி அடையாமல் கூச்சலிட்டனர்.


திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் இன்று திறக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை அவர் பிரதமருக்கு வைத்தார்.


முதல்வரின் பேச்சிலிருந்து...




அனைத்து துறைகளிலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு. இந்திய பொருளாதாரத்தில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. மதுரையை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும். சென்னை- பினாங்கு மற்றும் சென்னை- டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட இரண்டுவழிச்சாலைகளுக்கு சுங்க கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெல் நிறுவனம் ஒப்பந்தப் பணிகளை வழங்க வேண்டும். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் நிதியை விரைந்து வழங்க வேண்டும். 


பலத்த மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து தேசிய பேரிடர் நிதி வழங்க வேண்டும்.


தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளில் அரசியல் எதுவும் இல்லை. தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றித் தருவார் என இன்று நம்புகிறேன் என்று கூறினார் முதல்வர்.


முதல்வர் பேசப் பேச கூடியிருந்த பாஜகவினர் எழுந்து நின்று கோஷமிட்டனர். மோடி மோடி என்று முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேச்சை நிறுத்தவில்லை. பிரதமர் மோடியே இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து, அமைதியாக உட்காருமாறு பாஜகவினரை நோக்கி சைகை காட்டினார். ஆனால் முதல்வர் பேசி முடிக்கும் வரை பாஜகவினர் கூச்சலிட்டபடியே இருந்தனர்.