டெல்லி கிளம்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. நாளை பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு!

Su.tha Arivalagan
Sep 26, 2024,04:54 PM IST

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாளை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கவுள்ளார்.


நாளை காலை 11 மணியளவில் பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுதவிர தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய, நிலுவையில் உள்ள நிதியையும் ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம், முதல்வர் வலியுறுத்தவுள்ளார். 




சர்வ சிக்ஷா அபியான் திட்ட நிதியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்குமாறும் பிரதமரிடம், முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துவார். பிஎம்ஸ்ரீ பள்ளிகளை இந்தத் திட்டத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட மறுத்து வருவதால் முதல் தவணை நிதியான ரூ. 573 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமரை சந்திப்பதோடு, இந்தியா கூட்டணித் தலைவர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என்று தெரிகிறது. குறிப்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை முதல்வர் சந்திக்கக் கூடும்.


டெல்லியிலிருந்து திரும்பிய பின்னர் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இது எல்லாம் முடிந்த பிறகு அமைச்சரவை மாற்றமும் நடைபெறும் என்ற பேச்சும் அடிபடுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்