ரூ. 6000 நிவாரணத் தொகை வழங்கும் பணி.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Su.tha Arivalagan
Dec 17, 2023,06:53 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 6000 வழங்கப்படுகிறது.


மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக பெரும் மழை மற்றும் வெள்ளம் காரணமா சென்னை நகரமே தத்தளித்துப் போனது. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.


இந்த பாதிப்பிலிருந்து மக்களின் மன நிலை இன்னும் கூட முழுமையாக மீளவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த பலர் சொந்த ஊர்களுக்கும், வெளியூர்களுக்கும் போன கொடுமையும் நடந்தது. 




இந்த நிலையில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான நான்கு மாவட்ட மக்களுக்கு  குடும்பத்துக்கு ரூ. 6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.  அதன்படி இந்த நிவாரணத் தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வேளச்சேரியில் தொடங்கி வைத்தார்.


இதுதொடர்பாக முதல்வர் விடுத்த செய்தியில்,  Cyclone Michaung காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர். மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.