புதிதாக வாங்கப்பட்ட 100 BS6 ரக பேருந்துகள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டினார்!

Meenakshi
Jan 20, 2024,05:32 PM IST

சென்னை: புதிதாக வாங்கப்பட்ட 100 புதிய  BS6 பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


காற்றின் மாசுப்பாட்டை குறைக்கும் வகையில், ரூ.634.99 கோடி மதிப்பில் 1666  BS6 ரக பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதன் முதற்கட்டமாக ரூ.37.98 கோடி மதிப்பிலான 100 புதிய  BS6 ரக பேருந்துகள் இயக்கத்தை சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.




இதுதொடர்பாக கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில் போக்குவரத்து கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும்,  அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.


மேலும், 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைகள் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திற்கு என மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.




இந்த அறிவிப்புகளின் படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் அரசு போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகளை இயக்கிடும் வகையிலும் 634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டு புதிதாக 1666 BS6  பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும், கோயமுத்தூர் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும், கும்பகோண அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்திற்கு 5 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 புதிய பேருந்துகளும் என மொத்தம் 100 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.