"தர்மபுரியில் விதைத்தால்.. தமிழ்நாடு முழுவதும் விளையும்".. ஸ்டாலின் பெருமிதம்

Su.tha Arivalagan
Jul 24, 2023,12:21 PM IST

தர்மபுரி: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்ட முகாமையும், விண்ணப்ப படிவம் வழங்கும் பணியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். ஏன் தர்மபுரியில் இந்த விழா நடைபெறுகிறது என்பதையும் அவர் விளக்கினார்.

தமிழ்நாடு அரசு சார்பில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை தரும் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்ற பெயரில் வழங்கப்படவுள்ளது.



செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. அதற்கான முகாம்கள் இன்று முதல் செயல்படவுள்ளன. இந்த முகாமை தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்  விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணியையும் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 36,000 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு விண்ணப்பங்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக முகாமைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விண்ணப்பங்கள் வழங்க வந்த பெண்களிடம் உரையாடினார். மகளிர் சுய உதவிக் குழுக்களில் யார் யார் இருக்கீங்க என்றும் கேட்டார். அதனால் பலன் இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.  அப்போது லட்சுமி  என்ற பெண், மறைந்த முதல்வர் கருணாநிதிதான் தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறையாக மகளிர் சுய  உதவிக் குழுவைத் தொடங்கினார் என்பதை நினைவு கூறிப் பேசினார். இதைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின் வெரிகுட் என்று அவரைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.



பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசுகையில், 34 ஆண்டுகளுக்கு முன்பு 1989ம் ஆண்டு 
இதே தர்மபுரி மாவட்டத்தில்தான் மகளிர் சுய உதவிக் குழு என்ற அற்புதமான அமைப்பை மறைந்த முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டு பெண்கள், தன்னம்பிக்கையோடு வாழ்ந்திட வேண்டும், சுயமரியாதை உணர்வோடு வாழ்ந்திட வேண்டும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம். ஏழை எளிய மகளிரைக் கொண்டு இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் முதன் முதலில் தொடங்கப்பட்டது. அன்று கருணாநிதி விதைத்த விதைதான் இன்று மாபெரும் திட்டமாக தமிழ்நாடு முழுவதும் தழைத்து வளர்ந்து லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றி வைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுத்துப் பார்த்தால் நான்கு லட்சத்து 57,000 குழுக்கள் இயங்கிக் கொணடுள்ளன.



அப்படிப்பட்ட அற்புதமான திட்டத்துக்கு விதை போட்ட மண்தான் இந்த தர்மபுரி மண். தர்மபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுக்க விளையும் என்பதால்தான் இங்கு வந்து தொடங்கியிருக்கிறோம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டேன். நான் பதவியேற்ற பிறகு முதலில் நான் கையெழுத்துப் போட்டது தமினாந்ட்டு நலத் திட்ட உதவிகளுக்கு்ததான். முதல் கையெழுத்து மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து..  இதுதான் நான் போட்ட முதல் கையெழுத்து  . கோடிக்கணக்கான மகளிருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக நிதிச் சுமையைக் கருத்தில் கொள்ளாமல் கையெழுத்து போட்டேன் என்று கூறினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, எம்.ஆர்.கே. பழனிச்சாமி, தர்மபுரி எம்.பி. செந்தில்குமார்,  பாமக அவைத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.