முகமூடி தான் இந்தி.. அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
Feb 27, 2025,12:08 PM IST
சென்னை: அரசியல் களத்தில் கழகத்தை எப்போதும் எதிர்க்கும் கட்சிகள் கூட இந்தி திணிப்பு கூடாது என்கின்றனர். முகமூடி தான் இந்தி. ஆனால் அதில் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஹிந்தி திணிப்பை விமர்சித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை எனப்படும் இந்தி திணிப்பு குறித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு இந்தி திணிப்பு குறித்து விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,
பல ஆண்டுகாலம் பழமையான தமிழ் மொழியை என்றும் காத்து நிற்கும் திமுகவுடன் பல கட்சிகளும் இணைந்து இந்தி திணிப்பை எதிர்க்கின்றனர். கழகத்தை அரசியல் களத்தில் எப்போதும் எதற்கும் கட்சிகளும் கூட இந்தி திணிப்பு கூடாது என்கின்றனர். எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று ஒரு தினுசாக பேசுகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் மொழி. தன்னிலிருந்து திராவிட குடும்பத்து மொழிகளை கிளையற்றிடச் செய்த தாய் மொழி தமிழ். ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் இந்தி உருவானது. சமஸ்கிருதம் இந்தி மூலம் ஆரிய பண்பாட்டை திணிக்க முடிந்தால் இந்திய மண்ணில் இடம் கிடையாது.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் சமஸ்கிருதமயமாகும் திட்டம் தான் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும். கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்பதற்கிணங்க, சங்க இலக்கியம் காட்டும் குறிப்புகள் பலவும் சான்றுகளுடன் நிரூபிக்கப்படுகின்ற அளவிற்குத் தமிழ் மூத்த மொழியாக செம்மொழியாகத் திகழ்கிறது.
தமிழ் மொழியை இந்தியாலோ சமஸ்கிருதத்தாலோ அளிக்க முடியாது. இந்தியை ஏற்றுக் கொண்ட பீகார் மக்களின் சொந்த மொழியான மைத்திலி வழக்கொழிந்தது. இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் தாய்மொழி இந்தி என நினைப்போம். உண்மை அதுவல்ல. மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்கம் மொழியின் படையெடுப்பு சிதைத்து விட்டது. இந்தி சமஸ்கிருதம் படையெடுப்பால் வட இந்திய மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துள்ளன. தந்தை பெரியார் அன்றே சொன்னார். இந்தியால் தமிழ் அழியாது. ஆனால், தமிழ்ப் பண்பாடு அழிந்து போகும். இன்று வேலைக்காரியாக வரும் இந்தி, நாளை தமிழ் நாட்டரசி ஆவது நிச்சயம் என்று எச்சரித்தார்.
ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த மொழி மீது தாக்குதல் நடத்தி, பண்பாட்டை சிதைக்க வேண்டும் என்பதை பாசிச எண்ணம் கொண்டோர் கடைப்பிடித்தார்கள். அண்மையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் இந்தியா மீதான முந்தைய படையெடுப்புக்கள் குறித்துப் பேசியபோது, ஒரு மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், அதன் கலாச்சாரத்தை கையிலெடுப்பதும், மொழியை அழிப்பதுமே சிறந்த வழி என்று குறிப்பிட்டதை மறக்க முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொள்கையே அதுவாகத்தான் இருக்கிறது.