உயர்கல்வியில் சிறந்து விளங்கி தலைசிறந்த பொறுப்புகளில் மிளிர வேண்டும்... முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Meenakshi
May 06, 2024,12:06 PM IST

சென்னை: பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!  உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்! என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.,ஸ்டாலின் பிளஸ்டூவில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய 7.72 லட்சம் பேரில் 7,19,196 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 92.37 சதவீத மாணவர்களும், 96.44 சதவீதம்  மாணவிகளும் அடக்கம். வழக்கம் போல் இந்த தேர்விலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 2,478 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் 91.02 சதவீதமும்,  அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 96.07 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ம் தேதி  அவரவர் பள்ளிகளில் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.




+2 தேர்வில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:


பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.