டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் காரில்.. அமெரிக்காவை வலம் வந்த.. முதல்வர் மு க ஸ்டாலின்..!

Manjula Devi
Sep 02, 2024,12:00 PM IST

சிகாகோ:   தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் ஜாகுவார் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் காரில் பயணம் செய்துள்ளார் .


தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக 17 நாட்கள் அமெரிக்கா சென்றுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின். இதனை முடித்து விட்டு செப்டம்பர் 14ஆம் தேதி தாயகம் திரும்புகிறார். 




ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் வந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற முதலீட்டர்கள் மாநாட்டில் பங்கேற்று பல முன்னணி தொழில் நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து ரூபாய் 900 கோடி புத்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். இந்த ஒட்டுமொத்த முதலீடுகள் மூலமாக மதுரை, சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் உள்ள 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து சிகாகோ சென்ற முதல்வர் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.


இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் ஜாகுவார் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் காரில் பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தனது அமெரிக்க பயணம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள முதல்வர் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ போட்டு வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவில் நான் எங்கு சென்றாலும் தம்மை வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகளே.. தங்களது உழைப்பாலும், அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும் என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்