உலக செஸ் சாம்பியன் டி. குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசு.. அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார். இவர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஐந்து கோடி ரூபாய் ரொக்க தொகை பரிசை அறிவித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் 2024 செஸ் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் 14வது ஆட்டத்தில் சீனாவை சேர்ந்த டிங் லிரனை வீழ்த்தி , செஸ் வரலாற்றிலேயே மிகவும் இளம் வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பெருமையைப் பெற்றுள்ளார் குகேஷ். 18 வயதில், குகேஷ் இந்த உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு 18 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இரண்டாவது இளம் இந்தியர் குகேஷ்தான். இந்த நிலையில் தமிழ்நாட்டு இளம் செஸ் வீரர் குகேஷின் சாதனையை அங்கீகரிக்கும் வகையிலும், மேலும் அவரை ஊக்குவிக்கும் விதமாக ஐந்து கோடி ரூபாய் பரிசு தொகை வழங்க இருப்பதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு சிறப்பான முக்கியத்துவத்தை அளித்து வருகின்றது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் தமிழ்நாட்டில் அனைவரும் பாராட்டு வண்ணம் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உலக செஸ் சாம்பியன்ஸ் போட்டிகள் தமிழ்நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்தப்பட்டன. அதில் பங்கு பெற்று வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வீரர்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு பரிசுகளை வழங்கினார்.
தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷ் அவர்கள் நேற்று நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் அவர்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகை சூடி சாதனை படைத்து இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த டி குகேஷ் அவர்களை முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டிருந்ததோடு தொலைபேசி வாயிலாகவும் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள குகேஷ் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கிட வேண்டுமென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று டி குகேஷ் அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்