அமெரிக்கா சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஆட்டம் பாட்டத்துடன் அமர்க்களமான வரவேற்பு!
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டை பொருளாதார மாநிலமாக உயர்த்த முதல்வர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் சென்னையிலிருந்து விமான மூலமாக புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு அவர் 17 நாட்கள் தங்கி இருந்து முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்தும் பேசவும், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். ஆகஸ்ட் 31ம் தேதி, புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச இருக்கிறார் முதல்வர். செப்டம்பர் இரண்டாம் தேதி சிகாகோவில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி அயலக தமிழர்களின் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறார். இதன் பின்னர் அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் டிஆர்பி ராஜா மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் பொன்னாடை போர்த்தி பூங்கொத்துக்கள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார். அப்போது விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் என்ற பெயர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தாரைதப்பட்டைகள் முழங்க தமிழ் மொழி.. வாழ்க வாழ்க.. என்ற பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் நடனமாடி முதல்வர் மு க ஸ்டாலினை வரவேற்றனர். பின்னர் மகிழ்ச்சி வெள்ளத்தில் இரு கைகளை தட்டி மாணவர்கள் முதல்வரை வரவேற்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
நடிகர் நெப்போலியன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்