"எல்லார்க்கும் எல்லாம்".. அதி வேகமாக வளர்கிறது தமிழ்நாடு.. மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Su.tha Arivalagan
Sep 10, 2023,02:58 PM IST
சென்னை: எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் அதி வேகமாக வளர்ந்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 1000மாவது குடமுழுக்கு விழா நடைபெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த 1000மாவது குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவிலில்தான் இன்று 1000மாவது குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் கூறியிருப்பதாவது:

எல்லார்க்கும் எல்லாம் என்ற #DravidianModel ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.  குறிப்பாக  இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.

5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.

இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இதற்குக் காரணமான அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.