என் ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்துள்ளேன்.. நீங்களும் உதவுங்கள்.. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

Su.tha Arivalagan
Dec 08, 2023,06:17 PM IST

சென்னை: மிச்சாங் புயல் பாதிப்பைத் தொடர்ந்து தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தைக் கொடுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுப் போயுள்ளது மிச்சாங் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் மழையும், மிகப் பெரும் வெள்ளமும். இதுவரை இல்லாத அளவிலான மழைப் பொழிவை சென்னை சந்தித்து விட்டது.


இன்னும் கூட பல பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை. சென்னை புறநகர்களில் பல பகுதிகள் இன்னும் வெள்ளம் வடியாத நிலையும் காணப்படுகிறது. வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும், தன்னார்வலர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.




மத்திய அரசும், வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்ப்பதற்காக தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது ஒரு மாத சம்பளத்தைக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், #CycloneMichaung ஏற்படுத்தியுள்ள இயற்கைப் பேரிடரால் சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இந்த பாதிப்புகளைச் சரிசெய்ய #TNCMPRF-க்குத் தாமாக முன்வந்து நிதி அளித்து வரும் நல்லுள்ளங்களுக்கு நன்றி.


நானும் என்னுடைய ஒரு மாத ஊதியத்தை மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக அளிக்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்து MLA, MP-களும் அளித்திட வேண்டுகிறேன். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.