"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை: உங்க பாட்டி இந்திரா காந்திக்கு நேர்ந்த கதி தான் ராகுல் காந்திக்கும் நேரும் என்று பாஜக தலைவர் தர்விந்தர் சிங் மார்வா கூறியுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் ராகுல்காந்தி. சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார் ராகுல் காந்தி. அங்கு நடந்த நிகழ்ச்சியில், இட ஒதுக்கீடு, ஆர்.எஸ்.எஸ் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக வினரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் என்பவர், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்குவேன் என தெரிவித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் எற்படுத்தியது.
இந்நிலையில், ராகுல்காந்தியின் பாட்டிக்கு நேர்ந்த கதி தான் அவருக்கும் நேரும் என்று பாஜக தலைவர் தர்விந்தர் சிங் மார்வா என்பவர் கூறியது மேலும் பலரை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் காங்கிஸ் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ராகுல்காந்திக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக தலைவர் ஒருவரின் மிரட்டல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்திரா காந்திக்கு நேர்ந்தது தான் ராகுலுக்கும் நடக்கும் என்றும் நாக்கை அறுத்தால் பணம் வழங்கப்படும் என்றும் பாஜகவினர் மிரட்டியது கண்டிக்கத்தக்கது.
எனது சகோதரர் ராகுல் காந்திக்கு பெருகிவரும் மக்கள் ஆதரவு பலரை நிலைகுலைய வைத்துள்ளது. அதுதான் இது போன்ற மோசமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு ஜனநாயக நாட்டில் மிரட்டல் வன்முறைக்கு இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்