அடுத்தடுத்து ஐடி, இடி ரெய்டு.. பாஜகவின் பழிவாங்கும் அரசியல்.. ஸ்டாலின் கண்டனம்

Su.tha Arivalagan
Oct 05, 2023,12:40 PM IST

சென்னை: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அரசியல் ரீதியான ரெய்டுகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவதாகவும், சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்காத பாஜகவின் செயல் இது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்


அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்தே மத்திய அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, டெல்லி போலீஸ் ஆகியவை  அடுத்தடுத்து அதிரடியான ரெய்டுகளை நடத்தி வருகின்றன. இது தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது.




அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை குழுவினர் ரெய்டு நடத்தினர். புரட்சிகர எழுத்தாளர்கள், வக்கீல்கள் உள்ளிட்டோரின் வீடுகள் இதில் இலக்காக இருந்தன.


இதையடுத்து 3ம் தேதி டெல்லியில் நியூஸ்கிளிக் இணையதளத்தின் ஆசிரியர், அதன் பத்திரிகையாளர்கள், தொடர்பானவர்கள் என கிட்டத்தட்ட 46 பேரின் இருப்பிடங்களில் டெல்லி காவல்துறை ரெய்டு நடத்தியது. கடைசியில் நியூஸ்கிளிக் அலுவலகமும் மூடி சீல் வைக்கப்பட்டது.


நேற்று மீண்டும் டெல்லியில் ஒரு பரபரப்பு அரங்கேறியது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிஹ்கின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி கடைசியில் அவர் கைது செய்து அழைத்துச் சென்றது. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறது.


முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவைச் சேர்ந்த பெரும்புள்ளியுமான எம்.பி. ஜெகத்ரட்சகன் வீடு, உறவினர் வீடுகள், அவருக்குத் தொடர்பான கல்லூரிகள், தொழில்நிறுவனங்களில் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.


இந்த அதிரடி ரெய்டுகள் குறித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்:


மத்திய அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை!


ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கை கைது செய்திருப்பதும், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டை ரெய்டு செய்வதும் சுயேச்சையாக செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை அரசியல் லாபத்திற்காக சுயநலமாக பயன்படுத்துகிறது பாஜக என்பதற்கு சரியான எடுத்துக்காட்டுகள் ஆகும். குறிப்பாக இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு எதிராக இவற்களை பாஜக பயன்படுத்துகிறது.


எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வேண்டும் என்றே கைது உள்ளிட்ட அடக்குமுறைகளைப் பயன்படுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும் என்று நேற்றுதான் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்திருந்தது என்பதை பாஜக வசதியாக மறந்து விட்டது.  சட்டத்தையும், ஜனநாயகத்தையும் தனக்கு வசதியாக வளைக்கவே அது துடிக்கிறது.


எதிர்க்கட்சித் தலைவர்களுக்குள் ஒற்றுமை அதிகரித்திருப்பதையும், செல்வாக்கு அதிகரிப்பதும் பாஜகவை பயமுறுத்தியுள்ளது என்பது தெளிவாகி விட்டது.  அவர்கள் தங்களது வேட்டையை நிறுத்தி விட்டு, உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.