ஆஹா.. இது லிஸ்ட்டுலேயே இல்லையே.. போட்டோகிராபர்களை "கிளிக்"கிய ஸ்டாலின்!

Su.tha Arivalagan
Aug 19, 2023,01:05 PM IST
சென்னை: உலக புகைப்பட தினத்தையொட்டி இன்று சென்னையில் புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு சூப்பரான சர்ப்பிரைஸ் கொடுத்து அசத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படம் எடுப்பது என்பது இன்று பலருக்கும் பேஷனாகி விட்டது. ஆனால் அது ஒரு கலை. அந்தக் கலையை சரியாக கற்றுக் கொண்டு செய்யும்போது அட்டகாசமான அற்புதங்களை புகைப்படங்கள் மூலம் கொண்டு வர முடியும்.



இப்படிப்பட்ட புகைப்படக் கலைஞர்களுக்கான தினம்தான் இன்று. உலக புகைப்படக் கலைஞர்களுக்கான இந்தத் தினத்தையொட்டி சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென போட்டோகிராபராக மாறி புகைப்படக் கலைஞர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்தார்.

என்னை எத்தனை தடவை எடுத்திருப்பீங்க.. நீங்க போஸ் கொடுங்க நான் உங்களை போட்டோ எடுக்கிறேன் என்று கூறி கேமராவை கையில் எடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை எதிர்பாராத புகைப்படக் கலைஞர்கள் குஷியாகி விட்டனர். குழந்தைத்தனமான உற்சாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கூடி நின்று போஸ் கொடுத்தனர். மேலும் தங்களை புகைப்படம் எடுத்த முதல்வரை அவர்களும் தங்களது கேமராவில் கிளிக்கினர்.

அவர் கிளிக்க..இவர்கள் கிளிக்க என்று அந்த இடமே படு ஜாலியானதாொரு காட்சியாக மாறிக் காணப்பட்டது. சும்மா சொல்லக் கூடாது. முதல்வர் எடுத்த புகைப்படம் சூப்பராக வந்திருந்தது. பின்னர் புகைப்படக் கலைஞர்களுடன் சேர்ந்து நின்றும் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.






ஏன் இந்த தினம் வந்தது

1837ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி லூயிஸ் டெகுரே என்ற புகைபபடக் கலைஞர், டெகுரியோடைப் என்ற புதிய புகைப்பட பிராசஸ் முறையைக் கண்டுபிடித்தார். இதுதான் புகைப்படக் கலையில் ஏற்பட்ட மாபெரும் திருப்புமுனை புரட்சியாகும். இதன் பின்னர்தான் புகைப்படக் கலை மேலும் வளர்ந்து விரிவடைந்து இன்றுள்ள பல்வேறு அதி நவீனங்களுக்கு வித்திட்டது.



இந்த தினத்தை நினைவு கூறும் வகையிலும், உலகம் முழுவதும் உள்ள புகைப்படக் கலைஞர்களைக் கெளரவிக்கும் வகையிலும்தான் புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.