சாதிவாரிக் கணக்கெடுப்பு.. தேசியத் தலைவர்கள் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என தேசிய தலைவர்களுக்கு அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மூன்றாவது மாநாடு அதன் ஒருங்கிணைப்பாளரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை அவர் செய்திருந்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு இதில் பேசினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக உரையாற்றியபோது, இந்த மாநாட்டை நடத்துவதற்கு உழைத்த திமுக எம்பி பி.வில்சனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சமூக நீதி முன்னெடுப்புகளிலும், அரசியல் செயல்பாடுகளிலும் ஆர்வம் மிக்கவர் என்று புகழாரம் சூட்டினார். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து தேசிய தலைவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
அனைத்து பின்னடைவு காலியிடங்களையும் நிரப்புதல், நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டில் 50 சதவிகித உச்சவரம்பை நீக்குதல், மாநிலங்கள் தங்கள் இடஒதுக்கீட்டுக் கொள்கையை வகுக்க அதிகாரம் அளிப்பது போன்றவையெல்லாம் தான் தொடர்ந்து பேசிவருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், நாடு முழுவதும் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டின் முயற்சிதான் அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு தொடர்பான முதல் திருத்தத்துக்கு பிரதமராக இருந்த நேருவை ஊக்குவிக்க காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என தேசிய தலைவர்களுக்கு அழைப்புவிடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கான ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திமுக எம்.பி. பி. வில்சன்: சாதிகள் பற்றிய விரிவான தரவுகள் இல்லாதது நாட்டில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினருக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் தடையாக உள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டில் உள்ள இந்த காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது கடினமானது அல்ல என தெரிவித்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: திராவிட இயக்கம் மதச்சார்பின்மையை சமூக நீதியின் முக்கிய அம்சமாக வளர்த்தது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் மக்கள்தொகை பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கி, அதற்கேற்ப கொள்கைகளை உருவாக்கும் என குறிப்பிட்டார்.
சிபிஎம் பொலிட் பிரோ உறுப்பினர் பிருந்தா காரத்: உச்ச நீதிமன்றத்தால் வைக்கப்பட்டுள்ள செயற்கையான மற்றும் தன்னிச்சையான 50% வரம்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்திவருவதாக தெரிவித்தார்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்: மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த ஆயிரக்கணக்கான சமாஜ்வாதி கட்சியினர் போராடி சிறை சென்றதை குறிப்பிட்டு அனைவருக்கும் எல்லாம் என்ற இலக்கை அடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தங்கள் கட்சி கைகோர்த்து போராடும் என தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்: சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதிக்கான நோக்கத்தை முழுமையாக அடைய முடியாது என்றும், அர்த்தமுள்ள சமூக நீதியை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்: முலாயம் சிங் யாதவ், மு. கருணாநிதி போன்ற தலைவர்கள் மக்களுக்கு சமூக நீதி கிடைக்க எப்படி போராட வேண்டியிருந்தது என்பதை அகிலேஷ் யாதவ் விவரித்ததை குறிப்பிட்டு, அந்த நீண்ட சண்டை இன்னும் முடிவடையவில்லை என கூறினார்
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி: இட ஒதுக்கீடு அதிசயமாக நடந்ததா? இல்லை. மக்களை ஒருங்கிணைத்தால் நடந்தது என்றார். மேலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் இடஒதுக்கீட்டை பெற்று கொடுக்க வேண்டும் என்றார் இடஒதுக்கீடு என்பது சமூக மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை உருவாக்கும் என்றும் இடஒதுக்கீடு என்பது வெறுக்க வேண்டிய விஷயம் அல்ல. இது நமது பிறப்புரிமை, சலுகை அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி அது எங்களுக்குச் சொந்தமானது என தெரிவித்தார்
தேசிய மாநாட்டுக் கட்சி பரூக் அப்துல்லா: பெண்கள் மற்றும் ஓபிசியினருக்கு தங்கள் அரசு நிறைய செய்துள்ளதாகவும், ஓபிசிக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதாகவும் குறிப்பிட்டார் குழந்தைகள் கல்வியை நிறுத்தாமல் இருப்பதை உறுதி செய்தோம், பெண்கள் புர்கா அணிந்து வீட்டில் எப்போதும் உட்கார வேண்டாம் என்று தெரிவித்தோம், பிளவுகளைத் தொடர்ந்தால் இந்தியாவை எப்படி வலிமையாக்க முடியும் என்றார்.
நிலத்தையும் மங்களசூத்திரத்தையும் கூட முஸ்லிம்கள் பறித்துவிடுவார்கள் என்று சிலர் அச்சத்தை உருவாக்கினர். ஆனால் வேறு கலாச்சாரமாக இருந்தாலும் தமிழ்நாட்டையும் ஜம்மு காஷ்மீரையும் இணைத்ததுள்ளது சமூக நீதி தான், இந்தியாவை வலிமையாக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியா மீண்டும் பிரகாசிக்கும், இந்த இருள் மேகம் நீங்கும் என்று நான் நம்புகிறேன் எனவும் அவர் பேசினார்
திபாங்கர் பட்டாச்சார்யா, (சிபிஐஎம்எல்): பெண்களுக்கு அதிகாரமளித்தல், இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய விரிவான சமூக நீதியுடன் சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என கூறினார்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்: சாதி, மதம், மொழி, இடத்தின் பெயரால் இத்தனை ஆண்டுகளாக நாட்டைப் பிரித்தவர் யார் என கேள்வி எழுப்பியதுடன், இதுவரை எந்த ஆர்எஸ்எஸ் தலைவரும் யாரும் தாழ்த்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரவில்லை என்றுன், எப்போதும் இந்துக்கள் பற்றி பேசுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், லேட்டரல் எண்ட்ரி மற்றும் அவுட்சோர்சிங் என்ற பெயரில் இட ஒதுக்கீடு முறியடிக்கப்படுவதாகவும், ஜாதிகளின் எண்ணிக்கை மற்றும் அமைப்பு தெரியாவிட்டால், நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்து, இடஒதுக்கீட்டை அதிகரிப்பது எப்படி என்று சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பி.எல். ஹரிபிரசாத்: இடஒதுக்கீடு தகுதி மற்றும் செயல்திறனை சமரசம் செய்வதாக திட்டமிட்ட எதிர்மறை பிரச்சாரம் உள்ளதாகவும், அது உண்மையென்றால் 69% வழங்கும் தமிழ்நாடு மந்தமாக இருக்க வேண்டுமே என்றும், ஆனால், மனித வள மேம்பாடு மற்றும் சமூக வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். இடஒதுக்கீட்டிற்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் பாராட்டு தெரிவித்தார்.
பெரியார், நாராயண குரு, பசவண்ணா ரேவண்ணா, பூலே ஆகியோர் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை பாதுகாத்து வருகின்றனர் என்றும், இட ஒதுக்கீடு என்பது தொண்டோ, வறுமை ஒழிப்பு திட்டமோ அல்ல என்றும், அது சமத்துவத்தை உருவாக்குவதாக குறிப்பிட்டார்.
தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி. மஸ்தான் ராவ்: சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும், அனைத்து துறைகளிலும் OBC பிரதிநிதித்துவத்தை மேம்படுத்து அவர்கள் பங்கேற்பதை உறுதி செய்தல் அவசியம் என்றும் தெரிவித்ததுடன், தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி பி.வில்சன் ஆகியோரின் முயற்சிகளை பாராட்டினார்.
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி எம்.பி. ஃபௌசியா தாசீன் ஷமத் கான்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் போதெல்லாம் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, விரைவான பாதையில் செயல்படும் விரைவு நீதிமன்றங்கள் நமக்குத் தேவை என்றும், நீதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், அதானால் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் அவசியம் என்றும், அதை செய்ய விருப்பம் கொண்ட அரசு வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்பது பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனைகள் என குறிப்பிட்டார்.
இதுபோன்ற சமூக நீதி மாநாடு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடத்த வேண்டும் என்றும் ஆவலை வெளிப்படுத்தினார். இட ஒதுக்கீட்டிற்கு 50% புனிதம் என்று எதுவும் இல்லை என்றும், எந்த கடவுள் அல்லது எந்த நம்பிக்கையையும் கேட்காமல், நீதித்துறை அரசியல் சாசனத்திடமே கேட்கட்டும் என குறிப்பிட்டார். இந்த அரசையே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவும், இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவும் வற்புறுத்துவோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்