தமிழ்நாட்டுக்கு ஆபத்து வந்திருக்கிறது.. அதைத் தடுக்க வேண்டும்.. திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

Su.tha Arivalagan
Jan 21, 2024,06:44 PM IST

சென்னை: தமிழ்நாட்டுக்கு, தமிழ் மொழிக்கு, பண்பாட்டுக்கு ஆபத்து வந்திருக்கிறது. அதை தடுக்கும் மிகப் பெரிய பொறுப்பு திமுகவினர் முன்பு உள்ளது என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


சேலம் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் சிறப்புரையாற்றிப் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது முதல்வர் கூறியதாவது:


இளைஞர் அணி எனக்கு தாய் வீடு. 20 வயது குறைந்தது போல உணர்கிறேன். 30 வருடங்களுக்கு முன்பு இந்தப் பொறுப்பை கலைஞர், பேராசிரியர் ஆகியோர் என்னிடம் கொடுத்தார்கள். அதை நாங்கள் சிறப்பாக செய்தோம். என்னை வளர்த்து உருவாக்கிய இடம் இளைஞர் அணிதான். இதனால் உங்களிடம் எப்போதும் தனிப் பாசமும், உரிமையும் உண்டு. 


1980ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டது. அன்று முதல் நகரம், கிராமம் முழுக்க கொடி ஏற்றுவதும், பாசறைக் கூட்டம் நடத்துவது என்று தமிழ்நாட்டை வலம் வந்தேன். மாநாடுகளில் வெண் சீருடை அணிவகுப்பால் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்தோம். போராட்டக் களங்களில் அதிகமாக பங்கேற்றோம். பிரச்சாரங்களில் சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். 




1980 முதல் கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சியது இளைஞர் அணி. உழைப்பு உழைப்பு உழைப்பு என்று கலைஞர் என்னைப் பாராட்டினார் என்றால், அதற்கு இளைஞர் அணி தம்பிமார்கள் என்னை உற்சாகமூட்டியபடியே இருப்பார்கள். நான் எப்பவும் சுறுசுறுப்பாக இயங்க, என்னைச் சுற்றி இளைஞர்களே இருந்தார்கள். இளைஞர்களால் உருவான போர்க்கருவிதான் இந்த ஸ்டாலின். நான் மட்டும் இல்லை. ஏராளமான தளபதிகளை உருவாக்கிய அணிதான் இளைஞர் அணி. இங்கிருந்து பலரும் எம்பிக்களாக, எம்எல்ஏக்களாக, மாவட்டச் செயலாளர்களாக, அமைச்சர்களாக உயர்ந்துள்ளனர்.  நாளை நீங்களும் வருவீர்கள், வரணும். 


இந்த உயரத்திற்கு வருவதற்கு, உங்களை உழைப்பால் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இளைஞர்களே, தம்பிகளே உங்களுக்கு அறிவுரை  சொல்ல விரும்புவது என்னவென்றால். பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழ்நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். திராவிட இயக்கத்தின் வரலாற்றைத் தெரிஞ்சுக்கங்க.  திமுக ஒவ்வொரு முறை ஆட்சியில் இருந்தபோதும், அது செய்த சாதனைகளை தெரிஞ்சு வச்சுக்கங்க. அப்போதுதான் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி நமது கலைஞர் என்பது உங்களுக்குப் புரியும்.


நாசகார சக்திகள், எந்த வகையில் எல்லாம் நம்மை, நம் மொழியை, பண்பாட்டை நாசம் செய்தார்கள் என்று தெரியும். கொள்கை உணரவுதான் உங்களை செழுமைப்படுத்தும். உங்கள் மூலமாக கழகத்தை  வளர்க்கும், தமிழ்நாட்டை வளர்க்கும்.


முன்பெல்லாம், 2 நாள், 3 நாள் மாநாடு நடக்கும். மாநாடு நடத்தினால்தான் ஒரு காலத்தில் இதெல்லாம் சொல்ல முடியும். இப்போது ஒரு நாள் மாநாடாக மாறி விட்டது. சமூக ஊடகங்களில் பதிவிட்டால், லட்சக்கணக்கானோருக்கு அது போய்ச் சேர்ந்து விடுகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதைப் பயன்படுத்தி நமது கொள்கைகளை தொய்வில்லாமல் செய்ய வேண்டும். கொள்கை உரம்தான் உங்களுக்கு உரம், அதுதான் தமிழகத்திற்கான உரம். 75 வருடமாக கம்பீரமாக திமுக நிற்க கொள்கை உரம்தான் காரணம். சமூக நிதி, சமத்துவம், மொழிப் பற்று, இனப்பற்று எல்லோருக்கும் எல்லாம் என்ற அடித்தளத்தில் உருவானதுதான் திமுக.  


தமிழ்நாட்டுக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. அதைத் தடுக்கத்தான் மாநில உரிமை மீட்பு மாநாடாக இதை ஏற்பாடு செய்துள்ளோம். தமிழ் இனத்துக்கு ஆபத்து வந்திருக்கு. மொழியை அழிச்சு, பண்பாட்டை அழிச்சு தமிழகத்தை அழித்து நம்மை அடையாளமாற்றவர்களாக மாற்ற, பாசிச பாஜக திட்டமிட்டிருக்கு. கடந்த பத்தாண்டு காலத்தில் எல்லா வகையிலும் தமிழ்நாட்டை பாழ்படுத்தி விட்டது அதிமுக. அதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிச்சாமி. இப்போது அவர்கள் ஆடும் "உள்ளே வெளியே"  ஆட்டம் பாஜக போட்டுக் கொடுத்த நாடகம். அதை நம்ப அவர்களது தொண்டர்கள் தயாரக இல்லை. பாஜக - அதிமுகவின் படுபாதக செயலைத் தடுப்பதுதான் நமது முக்கியக் கடமை.


பிரதமர் மோடி 2 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். இரண்டு முறையும் மக்கள் வாக்களிக்கவில்லை. இந்த முறை தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவும் செயல்பப் போகிறது. பாஜகவுக்கு வேட்டு வைக்கே வேறு யாரும் வேண்டாம். ஆளுநர்களே போதும். அவர்களே அதை சிறப்பாக செய்து விடுவார்கள். இந்தியா கூட்டணி ஆட்சி கூட்டாட்சியாக இருக்கும். சர்வாதிகார ஆட்சியாக இருக்காது. மாநிலங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யக் கூடிய ஆட்சியாக இருக்கும். இந்தியாவை அனைத்து வகையிலும் முன்னேற்றக் கூடிய ஆட்சியாக இருக்கும். அந்தப் பணி நமக்கு வந்து கொண்டிருக்கிறது என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.